மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி அவர் காலமானார். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இன்று அவரது 5 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு எம்.பி., திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
முன்னதாக சென்னை காலை 7.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து இந்த பேரணி புறப்பட்டது. அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக முத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அமைதிப் பேரணி தொடங்கியது. ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்து சென்னை வாலாஜா சாலை வழியாக, முக ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அமைதிப் பேரணி சென்றனர். அதை தொடர்ந்து காமராஜர் சாலைக்கு சென்ற பேரணி, மெரினா கடற்கரையை ஒட்டி, அண்ணா நினைவிடம் அருகே அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் திமுக மூத்த தலைவர்கள் கருணாநிதி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். இதில், தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளார்கள், தலைமைச்செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி, சுற்றுச் சூழல் அணி, அயலக அணி ஆகிய அனைத்து அணியினரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த பேரணியில் கலந்து கொண்ட சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு கவுன்சிலருமான ஆலப்பாக்கம் சண்முகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறைந்த கவுன்சிலர் சண்முகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.