செந்தில் பாலாஜி வழக்கில் செப்.30 க்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலை வாங்கி தருவாதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கை தமிழகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசும் விசாரணையை நடத்தி வருகிறது. இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரி குற்றப்பிரிவு போலீசார் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கால அவகாசம் வழங்க மனுதாரர்கள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், 6 மாத அவகாசம் கோரியதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அரை மணி நேரம் அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதைத்தொடர்ந்து ஒட்டு மொத்த விசாரணையை 2 மாதங்களுக்குள் நாங்கள் நடத்தி முடிக்கிறோம் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.