மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட எஸ்.பிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, தனது செல்வாக்கைக் காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் என பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள அ.தி.மு.க மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் அதிமுக மாவட்ட செயலாளராகவும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் உள்ளேன். அதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற பெயரில் மாநாடு நடைபெற உள்ளது. மதுரை ரிங் ரோட்டில் உள்ள வலையங்குளம் பகுதியில் நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லூரி அருகில் அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாடு நடத்த தயார் செய்யப்பட்டு உள்ளது. அதிமுகவின் மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி மற்றும் ஆளுங்கட்சியின் மக்கள் விரோத செயல்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார். ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் இந்த அதிமுக மாநாட்டிற்கு கட்சியின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும் அதிமுக மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் தொண்டர்கள் வர உள்ளனர்.
அதிமுக மாநாடு நடத்த காவல்துறை அனுமதிக்காக கடந்த மே 31ஆம் தேதி காவல் கண்காணிப்பளரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை தரப்பில் மாநாடு நடத்துவதற்கு 22 நிபந்தனைகளோடு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிமுக மாநாட்டை நடத்த தயாராக இருக்கிறோம். இருப்பினும் அதிமுகவினருக்கு எதிரானவர்கள் அதிமுகவின் இந்த மாநாட்டின் நோக்கத்தை சீர்குலைக்க வாய்ப்புள்ளது. எனவே ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார் ஆர்பி உதயகுமார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சனை ஏற்படாத வகையில் தேவையான காவல்துறை பாதுகாப்பு வழங்குவதை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி.