என்.எல்.சி. போராட்டம் குறித்து இருதரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க முடிவு செய்துள்ளதாக ஐகோர்ட்டு கூறியுள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு தடை கேட்டு என்.எல்.சி. நிர்வாகம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்து வருகிறார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதற்கு என்று தனி இடத்தை அறிவிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தொழிலாளார்கள் தொடர்ந்து நுழைவு வாயில் அருகே நின்றுக்கொண்டு போராட்டம் நடத்துவதாக என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் என்.நித்தியானந்தம் கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, கடலூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிடப்போவதாக எச்சரிக்கை செய்தார்.
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் ரவி, “போலீஸ் சூப்பிரண்டு அறிவித்துள்ள இடத்தில்தான் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார். இதுகுறித்து கோர்ட்டில் ஆஜராகி இருந்த என்.எல்.சி. அதிகாரியை நேரில் அழைத்து நீதிபதி விசாரித்தார். அவர், “போலீஸ் சூப்பிரண்டு போராட்டம் நடைபெற வேண்டிய இடத்தை அறிவித்து விட்டார். ஆனால், தொழிலாளர்கள் அங்கு போராட்டத்தை நடத்தாமல், நுழைவு வாயிலை மறித்து பிற ஊழியர்களை வேலைக்கு செல்லவிடாமல் தடுக்கும் விதமாக போராட்டம் நடத்துகின்றனர்” என்று பதில் அளித்தார். மேலும், “அங்கீகரிக்கப்பட்ட தொழில் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை” என்றும் என்.எல்.சி. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கலாம்” என்று கருத்து தெரிவித்தார். அதற்கு என்.எல்.சி. தரப்பில், “தொழில் தாவா சட்டத்தின்படி அதற்கு என்று தனி அதிகாரி இருக்கிறார்” என்று கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, “அவர் பேச்சுவார்த்தை நடத்தி எந்த பயனும் இல்லையே. என்.எல்.சி. நிர்வாகம் பிரச்சினையை விலை கொடுத்து வாங்க விரும்புகிறதா? அல்லது அமைதியை விரும்புகிறதா? கடந்த முறையே இதுகுறித்து என்.எல்.சி. நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், பதில் அளிக்காமல் இருப்பது சரியான முறை இல்லை” என்று கண்டனம் தெரிவித்தார். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பின்னர், “வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று என்.எல்.சி. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சமரச பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க முடிவு செய்துள்ளேன். அதுகுறித்து இருதரப்பினரும் பதில் அளிக்க வேண்டும். மேலும், தொழிலாளர்கள் போராட்டம் குறித்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். தவறினால், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.