அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை 3-வது நாளாக விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள், செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்தவுள்ளனர். செவ்வாய்க்கிழமை முதல் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை நடத்தி வரும் விசாரணையில், பல்வேறு கேள்விகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, கரூரில் 9 இடங்களில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தனது எந்த விவரங்களும் தெரியாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் வீதம், 3 அதிகாரிகள் சுழற்சி முறையில் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையின்போது, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான கேள்விகள் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜியின் மனைவியின் வங்கிக் கணக்கிலும் ரூ.1.18 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள், ஏற்கெனவே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்தும் அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்தும் விசாரணை முழுவதும் வீடியோப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளிக்கும் பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.