தேனி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் உயிரிழந்துள்ளதில் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காந்தி நகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 22), அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (வயது 17) இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் திருமணம் செய்து கொள்ள வீட்டில் எதிர்ப்பு இருந்ததுடன், மாரிமுத்து தலித் என்பதால் பெண்வீட்டில் கூடுதலான எதிர்ப்பு இருந்துள்ளது. மகாலட்சுமிக்கு திருமண வயது இல்லாததால் மாரிமுத்துவின் மீது போக்சோ வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதியன்று மாரிமுத்துவின் வீட்டுக்குச் சென்று மகாலட்சுமி ‘என்னை திருமணம் செய்து கொள்’ என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் மாரிமுத்து குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்து காவல் துறையினர் தலையிட்டு பெண் வீட்டார் உடன் பேசி மகாலட்சுமியை அனுப்பி வைத்துள்ளார்கள். முற்றிலும் எதிர்பாராத நிலையில் கடந்த 5.08.2023 அன்று காந்தி நகர் அருகே உள்ள மாந்தோப்பில் மாரிமுத்து மற்றும் மகாலட்சுமி ஆகிய இருவரும் ஒரே மரத்தில் அருகருகே தூக்கு போட்டு இறந்துள்ளனர். கால்கள் இரண்டும் தரைதட்டிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததால் அது கொலையா, தற்கொலையா என்றும், சாதி ஆணவத்தால் நிகழ்த்தப்பட்ட ஆணவக்கொலையாக இருக்கலாம் எனவும் பரவலாக சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், தற்கொலையே என்றாலும் அதற்கு தூண்டியவர்கள் மீது வழக்கு பதியப்படவேண்டும். ஆகவே, இவர்களது மரணத்தில் பலத்த சந்தேகம் உள்ளதால் காவல் துறை உரிய முறையில் விசாரணை செய்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதியினர் தொடர்ந்து மிரட்டலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருவதும், அதை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் தற்போது இந்த இளம் தம்பதியினரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய போக்கினை அனுமதிப்பது நாகரிக சமூகத்திற்கு அழகல்ல என்பதை உணர்த்த வேண்டும். இவ்வாறு காதலர்கள் பிரச்சனை என்று காவல் நிலையம் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு வரும் போது விசாரித்து விட்டு வீட்டுக்கு அனுப்புவதற்கு மாறாக, அவர்களை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் துறையினர் தங்களது பராமரிப்பில் வைத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.