தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-

செம்மொழியான தமிழை உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர். ஆனால், மத்திய அரசு 3 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ 22.94 கோடி மட்டுமே ஒதுக்கியது. ஆனால், சமஸ்கிருத மொழிக்கு ரூ.643.85 கோடி ஒதுக்கியுள்ளது. எனவே, செம்மொழியான தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யவும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றவும். இந்தியா முழுவதும் செம்மொழியான தமிழை கொண்டு செல்ல போதுமான கல்வி நிறுவனங்களை துவங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்ப்பதில் ஒன்றிய அரசுக்கு ஆர்வம் உள்ளது. அதேநேரம், போதுமான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. தமிழ் வளர்ச்சி நிறுவனத்தின் கிளையை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியைப் பொறுத்தவரை தொலைநோக்கு பார்வையுடன் கூடிய முன்னெடுப்புகள் எதுவும் இன்னும் துவக்க வில்லை. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் தமிழின் ஆழம் எதிரொலிக்கிறது. கலை மற்றும் இலக்கியத்துக்கு மொழி பெரும் பங்காற்றியுள்ளது. எனவே, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்ற 16 வாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.