தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் மூவர் குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய மூவர் குழு தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. மேலும், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறை தொடரும் என்றும் ஒருமனதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம் பெறுவதற்கு ஏற்ப மத்திய அரசு மசோதா ஒன்றை தயாரித்துள்ளது. அந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஏற்ப பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளதாவது:-
தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பாவையாக மாற்றும் அப்பட்டமான முயற்சி இது. பாரபட்சமற்ற குழு தேவை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இனி என்னாகும்? ஒரு சார்புடைய தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் ஏன் நினைக்கிறார்? இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, தன்னிச்சையான, நியாயமற்ற மசோதா. மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் இதை நாங்கள் எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.