பாலியல் ரீதியான நோக்கமின்றி பெண்ணை கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல என பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உட்பட பலர் போராட்டம் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் துறையினர் 2 எப்ஜஆர் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜூலையில் பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புகார் தெரிவித்தவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்டக் கூடாது என மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் தெரிவித்தார்.
இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்நிலையில் பிரிஜ் பூஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் மோகன், “பாலியல் நோக்கமின்றி பெண்ணை கட்டி அணைப்பது குற்றமல்ல. மல்யுத்தத்தில் ஆண் பயிற்சியாளர்கள் அதிகம். வீராங்கனைகளுக்கு பயிற்சி கொடுப்பதும் அவர்கள் தான். அதனால் ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சியின்போது வீராங்கனைகளை தழுவி பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கும். இது இந்த விளையாட்டில் இயல்பானது. 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் நடந்தது என சொல்லி தற்போது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது கர்நாடகத்தின் பெல்லாரி மற்றும் லக்னோவில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கை டெல்லியில் விசாரிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.