பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது!

பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸான எரிஸ் வைரஸ் இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் முடங்கி கிடந்தன. நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கோவிட் 19 என குறிப்பிடப்பட்ட அந்த கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன்பிறகு கோவிட் 19 கொரோனா வைரஸ் உருமாறி பல அலைகளாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவிட் வைரஸின் புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரஸின் துணை பிரிவாக இந்த எரிஸ் வைரஸ் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெடிக்கல் டெர்ம்படி எரிஸ் வைரஸை EG. 5.1 என்று குறிப்பிட்டு வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு பிறகு பரவிய வைரஸ்களில் இந்த எரிஸ் வைரஸ்தான் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸாக உள்ளதும் மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் அதிவேகமாக பரவி வரும் இந்த எரிஸ் வைரஸால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் இந்த புதிய வகை எரிஸ் வைரஸ் கடந்த மே மாதமே இந்தியாவில் கண்டறியப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனை மகாராஷ்டிராவின் மரபணு வரிசைப்படுத்துதலுக்கான ஒருங்கிணைப்பாளரும், புனேவின் பிஜே மருத்துவக் கல்லூரியின் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் ராஜேஷ் கார்யகார்டே உறுதிப்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டி மாநில சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, ஜூலை இறுதியில் 70 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் 6 ஆம் தேதி 115 ஆக அதிகரித்துள்ளது. திங்கள் கிழமை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக இருந்தது. இந்தியாவில் எரிஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கொரோன நோய் தொற்று பரவலின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் அவை எரிஸ் வைரஸ் அல்ல என்றாலும் மருத்துவமனைகள் இனி நோய் தொற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் டாக்டர் ராஜேஷ் கார்யகார்டே தெரிவித்துள்ளார். பிரட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 பேரில் ஒருவருக்கு எரிஸ் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.