சிறையில் என்னை கொடுமைப்படுத்த செந்தில் பாலாஜியே காரணம்: சவுக்கு சங்கர்!

கடலூர் சிறையில் நான் அனுபவித்த கொடுமைகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என பிரபல யூடியூபரும், சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது எடப்பாடி பழனிசாமியின் அரசையும், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் சவுக்கு சங்கர். மேலும், திமுகவுக்கு ஆதரவாகவும் அவர் பேசி வந்தார். இதனிடையே, தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த சில மாதங்களிலேயே, ஆட்சியின் குறைகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர் விமர்சிக்க தொடங்கினார். இந்த சூழலில், நீதித்துறையை விமர்சித்து சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். இதையடுத்து, அவர் மீது மதுரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தது. இதன்பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடலூர் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். அங்கு அவரை பார்க்க யாருக்கும் சிறைத்துறை அனுமதி வழங்காததை கண்டித்து அவர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், கடலூர் சிறையில் தான் அனுபவித்த கொடுமைகள், அதற்கு யார் காரணம், சிறையில் இருந்து வெளி நபர்களை எப்படி தொடர்புகொண்டேன் என்பது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என்னை சிறைக்கு அனுப்பியது நீதிமன்றம். ஆனால் சிறையில் எனக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளையும் செய்தது திமுக அரசு தான். திமுக அரசு என சொல்வதை விட அமைச்சர் செந்தில் பாலாஜியும், அப்போதைய உளவுத்துறை ஏடிஜிபியான டேவிட்சன் ஆசிர்வாதமும்தான் எனக்கு கொடுமை நடக்க காரணமாக இருந்தவர்கள். சிறையில் எந்தவொரு மனிதனின் மன உறுதியையும் எளிதாக உடைத்துவிடலாம். என்னை யாரும் சந்திக்கவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அதை எதிர்த்து நான் உண்ணாவிரதம் இருந்தேன்.

அப்போது உடல்நிலை மோசமாகி, இரவுக்குள் நான் கோமாவுக்கு சென்றுவிடுவேன் என டேவிட்சன் ஆசிர்வாதத்துக்கு சிறைத்துறை எஸ்.பி. தகவல் கொடுக்கிறார். அதற்கு டேவிட்சன் என்ன சொன்னார் தெரியுமா? “இவனே ஒரு கைதி.. இவன் ஒரு டிமாண்டு வைப்பான்; நாம அவன்ட்ட இறங்கி போய் பேசணுமா.. சாகும் வரை உண்ணாவிரதம்னு லெட்டர் எழுதி கொடுத்துருக்கான்ல.. விடுங்க செத்தா செத்துட்டு போறான்” என்று டேவிட்சன் சொன்னதாக ஒரு அதிகாரி என்னிடம் கூறினார். அப்புறம்.. அந்தப் பகுதியில் உள்ள எனது நலம் விரும்பியான ஐபிஎஸ் அதிகாரி யார் யாரிடமோ பேசி இரவு எனக்கு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது.

சிறையில் இருந்துகொண்டே அங்கு நடக்கும் விஷயங்களை வெளியே தெரியப்படுத்துவது சாதாரண விஷயம் கிடையாது. சிறையில் உங்களை அடித்து புதைத்தாலும், வெளியே தெரிய 10 நாள் ஆயிடும். அப்படியிருக்கும் போது, நான் சிறையில் இருந்து கொண்டே எனது வழக்கறிஞர் புகழேந்தியை தொடர்புகொண்டேன். என்னை கொடுமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு எனக்கு இரண்டு காவலர்களை பாதுகாப்புக்கு போட்டார்கள். தினமும் இரண்டு காவலர்கள் அப்படி வருவார்கள். அப்படி வருபவர்களில் யாரை நமது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆராய்ந்து அவர்களை வைத்தே நெட்வொர்க் அமைத்து எனது வழக்கறிஞரை தொடர்புகொண்டேன். இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.