பாஜக தலைவர்கள் ப்ளூ பிலிம் பார்த்த போது எங்கே போனீர்கள்: காயத்ரி ரகுராம்!

ராகுல் காந்தி ஃபிளையிங் கிஸ் கொடுத்தது அன்பின் அடையாளம் என்றும் பாஜக தலைவர்கள் ப்ளூ பிலிம் பார்த்த போது எங்கே போனீர்கள் என்றும் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வன்முறையால் கடந்த மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. 32 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய மாநிலத்தை கூட அந்த மாநில முதல்வரால் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த நிலையில் கலவரம் நடக்கும் ஒரு மாநிலத்தின் கள நிலவரத்தை பிரதமர் நரேந்திர மோடி போய் பார்க்கவில்லை என்றும் மத்திய அரசு கலவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரத்தை பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தும் முடியவில்லை. இதனால் தினந்தோறும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீது நேற்றைய தினம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அவர் எடுத்த எடுப்பிலேயே அதானி பெயரை சொல்லியதால் நாடாளுமன்றத்தில் கூச்சல் நிலவியது. பிறகு மக்களவை சபாநாயகர் அனைவரையும் அமைதியாக இருக்க சொன்னார். இதையடுத்து ராகுல் பேசிய போது நான் இங்கு அதானியை பற்றி பேச வரவில்லை என தனது பேச்சை ஆரம்பித்தார். மணிப்பூரில் இந்தியா பற்றி எரிகிறது. பாரததாயை கொன்றுவிட்டார்கள் என கூறி பிரதமர் அதானி, அமித்ஷா ஆகியோரின் பேச்சையே கேட்கிறார் என்றும் மணிப்பூருக்கு நான் சென்றுவந்தேன். ஆனால் பிரதமர் ஏன் செல்லவில்லை என்றும் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

அப்போது அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து பேசினார். அவர் காங்கிரஸையும் திமுகவையும் ஊழல் கட்சி என விமர்சித்தார். ராகுல் காந்தியை பேச விடாமல் செய்த போது அவர் ராஜஸ்தான் பேரணி செல்வதற்காக அவையை விட்டு கிளம்ப வேண்டிய சூழல் இருந்ததால் சபாநாயகரை பார்த்து ஃபிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு கிளம்பினார். இதற்கு ஸ்மிருதி இரானி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் ராகுல் ஃபிளையிங் கிஸ் கொடுத்தது குறித்து பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை பாஜக எம்பிக்கள் ஆபாசமான சைகையாக பார்த்து வரும் நிலையில் பலர் இதை அன்பின் அடையாளமாகவே பார்க்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் ராகுல்காந்திக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் பேசியுள்ளார். இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் முன்பு உணர்ச்சியால் முத்தமிடும் போது இருவரையும் கண்டிக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்தியின் சிக்னேச்சர் ஸ்டைல் பிளையிங் கிஸ் அவர் ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் தனது உரையை முடித்ததும் இதை செய்து வருகிறார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் கூட அவர் மக்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார். ஆனால் பாஜக தலைவர்கள் சட்டசபையில் ப்ளூ பிலிம் பார்த்து பிடிபட்டுள்ளனர். அப்போதெல்லாம் பாஜக பெண் எம்பிக்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை. பல பொதுக் கூட்டங்களில் பல பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள். அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை. இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.