நிலவை ஆராய ‘லூனா-25’ விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது ரஷ்யா!

விண்வெளி ஆராய்ச்சியின் முன்னனியில் உள்ள நாடான ரஷ்யா, நிலவை ஆராய்வதற்காக “லூனா-25” என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா-24 என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது. இந்தநிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு விண்கலத்தை இன்று ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது. 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை லூனா-25 விண்கலம் அடையும் என்றும் பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறும்போது நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் முதல் விண்கலமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷ்ய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர். ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது. நிலவின் பாதைகளில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று லூனா-25 ஆய்வு செய்யும். சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி அலெக்ஸாண்டர் பிளோகின் கூறியதாவது:-

வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் விண்கலம் தரையிறங்க உள்ளது. தற்போது வரை நிலவின் equatorial zone பகுதியில் தான் விண்கலம் தரையிறக்கப்பட்டுள்ளது என்றார். நிலவின் ஒரு ஆண்டு காலம் ஆய்வு செய்யும் வகையில் லுனா 25 விண்கலம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் நிலவின் தென் துருவத்தில் உள்ள மண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய இருப்பதாகவும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த விண்கலம் வரும் 21 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க கூடும் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு அமைப்பான Roscosmos தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் 23 ஆம் தேதி தரையிறங்க திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக இரண்டு நாட்களுக்கு முன்பே தரையிறங்க வகைக்கும் வகையில் ரஷ்யா வடிவமைத்துள்ளதாக தெரிகிறது. ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் 1,800 கிலோ எடை கொண்டது ஆகும். நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்கள், எரிபொருள், ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளது.