சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“உச்சநீதிமன்ற உத்தரவின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் நானும், தோழர் ரவிகுமார் அவர்களும் கடிதம் அளித்து வலியுறுத்தினோம். ” பிஜேபி எம்.பி.யான திரு. கிரித் சோலங்கி தலைமையிலான எஸ்சி, எஸ்டி நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த ஐந்தாண்டுகளில் குரூப் ஏ-யில் பதவி உயர்வு பெற்ற எஸ்சி, எஸ்டி ஊழியர்களின் பிரதிநிதித்துவம், எஸ்சி-க்கான 15%க்கும் எஸ்டிக்கு 7.5% க்கும் குறைவாகவே உள்ளது” என்று எடுத்துக்காட்டியுள்ளது. இதேபோன்ற குறைவான பிரதிநிதித்துவம் குரூப் சி மற்றும் டிக்கும் காணப்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பின்னடைவு காலியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.
அதுமட்டுமின்றி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தற்காலிக நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கி DOPT உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் குறிப்பிட்ட பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு அவுட்சோர்சிங் செய்கின்றன, இட ஒதுக்கீட்டைப் புறக்கணிக்கின்றன. எஸ்சி மற்றும் எஸ்டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டிற்கான உரிமையை மாண்புமிகு உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக, 2022 ஆம் ஆண்டின் சிவில் மேல்முறையீட்டு எண். 629 இல், “ஜர்னைல் சிங் & பிறர் Vs லச்மி நரேன் குப்தா & பிறர்” என்ற வழக்கில், பதவி உயர்வு அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை வழங்குவதற்காக எஸ்சி, எஸ்டி-களின் பிரதிநிதித்துவத்தை அளவிடுவதற்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. மதிப்பீட்டின் அலகு என்பது ‘கேடர்’ ஆகும், இது குரூப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஒவ்வொரு தனிப்பட்ட கேடருக்கும் கணக்கிடக்கூடிய தரவு தொகுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது, ஒன்றிய அரசின் கடமை. உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரவுகளை உடனடியாக சேகரிக்கவும் அதன் அடிப்படையில் எஸ்சி மற்றும் எஸ்டியினருக்கு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உரிய உத்தரவுகளை மாநில அரசுகளுக்குப் பிறப்பிக்கவேண்டும்” என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தினோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.