பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சில நாட்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. சாதி, மத, பேதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் ஒரு சமுதாயத்தைப் படைத்து, அனைத்துத் தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில் இந்த அரசு செயலாற்றி வருவதை மக்கள் அறிவார்கள். இச்சூழ்நிலையில், இதுபோன்ற ஒரு சம்பவம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
எதிர்கால சமுதாயம் சாதி, மதம் போன்ற பிற்போக்குச் சிந்தனைகளற்று, சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்; புதிய தமிழ்நாடு படைத்திட வேண்டும் என்றெல்லாம் எண்ணி கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்சினைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை நமக்குத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அம்மாணவனின் உயர் கல்விச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.
இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.