தமிழ்நாட்டில் 186 எய்ட்ஸ் மையங்களை மூட மத்திய அரசு முடிவெடுத்திருந்த நிலையில், இது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் ஆகியவற்றில் 377 ஹெச்ஐவி பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 186 மையங்களை மூடும்படி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. மேற்குறிப்பிட்ட மையங்களில் கர்ப்பிணிகளுக்கு கட்டாய எய்ட்ஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் 186 மையங்கள் திடீரென மூடினால் சாமானிய மக்களால் இலவசமாக எய்ட்ஸ் பரிசோதனையை செய்ய முடியாது. எனவே அவர்கள் வலுக் கட்டாயமாக தனியார் மருத்துவமனைகளை நோக்கி நகர்வார்கள். பலர் பரிசோதனையை தவிர்க்கக்கூடும். இது எய்ட்ஸ் பாதிப்பை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த மையங்களை மூடும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில்தான் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவாரை நேரில் சந்தித்து 186 மையங்களை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில், “எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு அளித்த பின்னரும் நாட்டில் சுமார் 23 லட்சம் பேர் எய்ட்ஸ் தொடர்பான ஹெச்ஐவி நோய்த்தொற்றுடன் உள்ளனர். தமிழகத்தில் 1.43 லட்சம் பேர் உள்ளனர். எய்ட்ஸ் விழிப்புணர்வை அதிகரிக்கவேண்டிய சூழ்நிலையில் பரிசோதனை மையங்களை மூடினால், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் முடங்கும் நிலைக்கு செல்லும். ஹெச்ஐவி பெரும்பாலும் விளிம்புநிலை பெண்களின் பிரச்னையாக இருக்கிறது. அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. தற்போது கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் பரிசோதனை 100 சதவீதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பரிசோதனை மையங்களை மூடுவதற்கான உத்தரவை உடடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று” வலியுறுத்தியுள்ளார்.