நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர நாளன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசும் கவர்னரை வன்மையாக கண்டிக்கிறேன். 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்கும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கவர்னர் பேசுகிறார். ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நிலையை உணர மறுக்கிறார் கவர்னர் ரவி. பல சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராமல், பல்கலைக்கழகங்களைச் சிதைத்தும், உயர்கல்வித்துறையைக் குழப்பியும் வருகிறார் கவர்னர் ரவி.
நீட் தேர்வு மரணங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகள் நமது மனசாட்சியை உலுக்கி வருகிறது. கவர்னரின் செயலை தமிழ்நாடு கல்வித்துறையின் மீது நடத்தும் சதியாகவே பார்க்கிறோம். சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் கவர்னரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக சுதந்திர தின விழாவையொட்டி, கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுதந்திர நாள் விழாவினையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநர் தரும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அந்த கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார். அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசனும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.