காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி, மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் காவிரியில் இருந்து எவ்வளவு நீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது; மேலும், அந்த நீரை பிலிகுண்டுலுவில் அளவீடு செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, ஜூன் முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையில் தமிழகத்துக்கு 53.77 டிஎம்சி. தண்ணீா் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கா்நாடக அரசு வெறும் 15.79 டி.எம்.சி. நீரை மட்டுமே வழங்கியுள்ளது. பற்றாக்குறை நீரின் அளவு 37.97 டி.எம்.சி. எனவே, தமிழகத்துக்கான உரிய பங்கீட்டு அளவு நீரை கா்நாடகம் திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்திருந்தாா். அதன்படி, உச்சநீதிமன்றத்தில் 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை (ஆக. 10) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாளொன்றுக்கு 15,000 கனஅடி தண்ணீரை 15 நாள்களுக்கு விடுவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை (ஆக. 11)நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இது குறித்து 3 மணி நேரத்துக்கு மேல் விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்குத் தேவையான காவிரி நீா் அளவு குறித்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், கா்நாடக அரசுத் தரப்பு அதிகாரிகள் 15,000 கன அடிக்குப் பதிலாக 8,000 கனஅடி மட்டும்தான் தண்ணீா் திறக்கப்படும் என்றும், அதுவும் ஆகஸ்ட் 22 வரையில் மட்டுமே அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனா். கூட்டத்தில், தமிழகத்துக்கு வர வேண்டிய 37.97 டிஎம்சி நீா் பற்றாக்குறையை கா்நாடகம் வழங்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து, அந்தக் கூட்டத்திலிருந்து தமிழக நீா்வளத் துறை செயலா் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.