ரஷ்யாவில் எரிவாயு நிலைய விபத்தில் 25 பேர் பலி!

ரஷ்யாவில் எரி வாயு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால் இருநாடுகளுமே உருக்குலைந்து போயுள்ளது. போரினால் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளும் பெரும் பொருட் சேதத்தை சந்தித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள எரிவாயு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே தீ பிழம்பாக காட்சியளித்தது. பல அடி உயரத்திற்கு தீ சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 66 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் 13 பேர் குழந்தைகள் ஆவார். இந்த விபத்தில் ஏராளமான வாகனங்களும் தீக்கு இரையாகியுள்ளன. 600 சர மீட்டர் பரப்பளவில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

தாகெஸ்தானின் தலைநகர் மகச்சலாவில் நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் உள்ள கார் பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது என்றும் அந்த தீ அருகில் இருந்த எரிவாயு நிலையத்திற்கு பரவி இந்த வெடி விபத்து நிகழ்ந்தாக கூறப்படுகிறது.