ஜெயலலிதா புடவை கிழிப்பு விவகாரம்: திருநாவுக்கரசர் மீண்டும் விளக்கம்!

எது உண்மையோ அதைத்தான் சொல்கிறேன். அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்கிறேன் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் பேச வேண்டி ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “கனிமொழி பேசும் போது திரௌபதியை பற்றி பேசினார். இந்த அவைக்கு ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் என்ன நடந்தது? எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது. நீங்கள் கௌரவர் சபையை பற்றி பேசுவதா?” என கேள்வி எழுப்பி இருந்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த குற்றச்சாட்டுக்கு அங்கிருந்த திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அது ‘அதிமுகவினர் திட்டமிட்டு நடத்திய நாடகம்’ என்று தெரிவித்திருந்தனர்.

நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை மோதலில் ஜெயலலிதா உடன் இருந்த தற்போதைய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அதில் “1989ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் அரசியலில் இருந்தார்களா என்று தெரியாது. தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்கள் அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அவருக்கு கிடைத்த தவறான தகவல்களை வைத்துக் கொண்டு குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என அவர் பேசி உள்ளார். அந்த சம்பவம் நடைபெற்ற போது நான் தான் எதிர்க் கட்சித் துணைத் தலைவராக இருந்தேன். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் முதலமைச்சராகி கலைஞர் முதல் பட்ஜெட்டை படிக்கும் போது அதிமுக சார்பில் பட்ஜெட்டை படிக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் திட்டம். கலைஞர் பட்ஜெட்டை படிக்கத் தொடங்கிய போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்த பட்ஜெட்டை இழுத்தார்கள். அப்போது கலைஞர் கண்ணாடி கீழே விழுந்துவிட்டது. பின்னாடி இருந்தவர்கள் கலைஞர் முகத்தில் குத்திவிட்டார்கள் என்று தவறாக நினைத்து அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். புத்தகங்கள் ஜெயலலிதா மீது விழுந்தது. அடிதடி நடந்ததே தவிர சேலை இழுப்பு நடக்கவில்லை. என்மீதும் அடியும் புத்தகங்களும் விழுந்தது. யாரும் சேலையை பிடித்து இழுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை மோதல் தொடர்பாக அன்றைய தினம் நாளிதழ்களில் வந்த செய்திகளில் “துச்சாதனர்கள், துரியோதனர்கள் விரைவில் அழிவார்கள்” என்று கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் விமர்சித்து பேசிய திருநாவுக்கரசரின் பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.

இது குறித்து டுவீட் செய்திருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா “இவர் திருநாவுக்கரசர் அல்ல, இரு நாவுக்கரசர். பாவம் மனிதர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார், சொல்வார் என்பது நிரூபணம்” என கூறி இருந்தார்.

இந்த நிலையில் 1989ஆம் ஆண்டில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் நீங்கள் கொடுத்த பேட்டிக்கும் தற்போது நீங்கள் கொடுத்து வரும் பேட்டிகளுக்கும் வித்தியாசம் உள்ளதாக கூறப்படுகிறதே? என திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், ”அண்ணா திமுகவில் இருந்துகொண்டு திமுகவை வாழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அல்லது காங்கிரஸில் திமுக கூட்டணில் இருந்து கொண்டு அண்ணா திமுகவை வாழ்த்த சொல்கிறீர்களா? ஒரு மனிதன் அரசியல் ரீதியாக எதை சொல்ல முடியுமோ; அரசியல் ரீதியாக எது சாத்தியக் கூறோ அதனோடு சேர்த்து எது உண்மையோ அதைத்தான் சொல்கிறேன். அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்கிறேன்” என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.