கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராக முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் மாணவி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்னை பெரியதாக வெடித்துக்கொண்டிருந்தது. இதனையடுத்து போலீஸ் போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக மாணவி உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “நான் கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன். கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தேன். அதே விமானத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற நேரம். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. எனவே, விமானத்தில் இருந்து இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்தேன். அதைக் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன், விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கத்தில் என்னைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். ஆனால், அவரது புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவருக்கு பதில் எதிர் தரப்பில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் வழக்கு விசாரணையில் அரசு தரப்பில், “தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது அதற்கான அதிகாரம் இல்லை” என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் உத்தரவுக்கு பின்னர் சோபியா டுவிட்டர் சோஷியல் மீடியாவில் எழுதியிருப்பது டிரெண்டாகி வருகிறது. அதாவது, “ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை என் மீதான எஃப்ஐஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்துள்ளது. பாசிச பாஜகஆட்சி_ஒழிக” என்று குறிப்பிட்டுள்ளார்.