உச்சநீதிமன்றம் கள்ள காதல், விபச்சாரி வார்த்தைகளுக்கு புதிய சொற்கள் வெளியீடு!

உச்சநீதிமன்றம் பாலின வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் சபாஷ் போடுகிற வகையில் புதிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்துகிற வகையிலான பாலின வார்த்தைகளுக்கு மாற்றான வார்த்தைகள் அந்த கையேட்டில் இடம்பெற்றுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று புதன்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், அநீதியான அல்லது முகம் சுளிக்க வைக்கும் வகையில் பயன்படுத்தக் கூடிய பாலினம் சார்ந்த/ பாலியல் வழக்கு சார்ந்த வார்த்தைகளுக்கு மாற்றான வார்த்தைகளுடனான 30 பக்க கையேடு ஒன்று வெளியிடப்பட்டதாக அறிவித்தார். அப்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கு விசாரணைகளின் போது ஒரே மாதிரியான சொற்களை பயன்படுத்தும் வகையில் இந்த கையேடு உருவாக்கப்பட்டிருக்கிறது; நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் எளிதாக வழக்கு நடைமுறைகளை புரிந்து கொள்ளவும் முடியும் என்றார்.

இந்த கையேட்டில் இடம்பெற்றுள்ள சொற்கள்தான் இனி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிற மனுக்கள், நீதிபதிகளின் உத்தரவுகள் உள்ளிட்ட சட்டம் சார்ந்த அனைத்து நடைமுறைகளில் இடம்பெறும். இந்த கையேட்டின் அடிப்படையிலேயே பெண்களை குறிப்பிட வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான சொற்களை இனி தவிர்க்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.