டோல்கேட் உடைப்பு விவகாரத்தில் வேல்முருகன் மீதான வழக்கு ரத்து!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது, சுங்கச்சாவடியை உடைக்க கட்சியினருக்கு உத்தரவிட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், அங்கு டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சுங்கச்சாவடியை தாக்கி சேதப்படுத்தும்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தூண்டியதாக, தவாக தலைவர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து இருந்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காந்திகுமார் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.