நீட் விலக்கு முழு பொறுப்பையும் ஏற்கிறேன். ஒரு உதயநிதி இதுகுறித்து பேசிப் பயனில்லை. மக்கள் போராட்டமாக இது மாற வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மருத்துவ பட்ட படிப்புக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவர் ஆக முடியாத அரியலூர் அனிதா உள்ளிட்ட பல மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டனர். சமீபத்தில் மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலையும் தமிழகத்தில் கொந்தளிப்பை உண்டாக்கியது. நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தின் உணர்வுப்பூர்வமான விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றன. சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என பேசியது சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அதற்கு எதிராக ஆளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்த்தும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராத ஆளுநரைக் கண்டித்தும் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்துகொள்கிறார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதியிடம், ஒரு அமைச்சர் போராட்டத்தில் கலந்துகொள்கிறார் என்று விமர்சனங்கள் எழுகின்றனவே என கேள்வி எழுப்பினர். அதற்கு, விமர்சனங்கள் குறித்தெல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது. எத்தனை விமர்சங்கள் வந்தாலும் போராட்டத்தில் கலந்துகொள்வோம். எங்கள் தேவை நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்பதுதான். மாணவர்கள் பக்கம் நாங்கள் எப்போதும் நிற்போம். நீட் தேர்வால் வருடந்தோறும் மாணவர்களை பலி கொடுத்துக்கொண்டிருந்தோம். இப்போது மாணவர்களின் குடும்பத்தினர் உயிரையும் பலி கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் உணர்வுப்பூர்வமாக இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றார்.
நீட் தேர்வு விலக்குக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்த உதயநிதி, தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட் ரத்து செய்யப்படும் என உறுதியளித்தேன், உண்மைதான் என்றும் கூறினார். மேலும், அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதிமுக போல பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது எங்கள் எண்ணம் கிடையாது. முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன். அதேபோல மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும். கேலி, கிண்டல் வந்தாலும் அதுகுறித்து கவலையில்லை. மாணவர்கள் பக்கம் நான் தொடர்ந்து நிற்பேன். ஒரு உதயநிதி இதுகுறித்து பேசிப் பயனில்லை. மக்கள் போராட்டமாக இது மாற வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தினார்.