அ.தி.மு.க. மாநாடு தினத்தன்று நடத்தப்படும் தி.மு.க.வின் போராட்டத்தால் அ.தி.மு.க. எழுச்சியை தடுக்க முடியாது என சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. மாநில மாநாடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் 20-ந் தேதி, மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் அருகே உள்ள திடலில் நடக்கிறது. மாநாட்டிற்கு மதுரை மக்களை அழைக்கும் விதமாக ஜெயலலிதா பேரவை சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும் மாநாடு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனம் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் வடிவமைக்கப்பட்டு உள்ள வாகனம் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அ.தி.மு.க. மாநாடு குறித்து மக்களுக்கு தகவல்களை தெரிவிக்கும். இந்த வாகனத்தை மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, செல்லூர் ராஜூ, வேலுமணி, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், கே. சி. வீரமணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இதுவரை உலகமே கண்டிராத வகையில் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு காலை முதல் இரவு வரை உணவு தயாரிக்க சமையல் கலைஞர்கள் தங்களது பணியினை தொடங்கி விட்டனர். மாநாட்டின் முகப்பில் 51 அடியில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டு உள்ளது. 5 லட்சம் சதுர அடியில் மாநாட்டு பந்தல் பணி அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 12 இடங்களில் 350 ஏக்கரில் வாகனம் நிறுத்தும் இடங்கள், கழிப்பறை வசதிகள், குடிநீர் தொட்டிகள் மற்றும் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி என்ன பேச போகிறார்? என தமிழக மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு இந்த மாநாடுதான் முடிவுரை எழுத போகிறது. எனவே தான் தமிழக அரசு, இந்த மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு கூட தரவில்லை. ஐகோர்ட்டில் வழக்கு போட்டு பாதுகாப்பு கேட்டு பெற்று இருக்கிறோம். மக்கள் மத்தியில் மாநாடு கவனம் பெற கூடாது என அதேநாளில் தி.மு.க. நீட் எதிர்ப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது திசை திருப்பும் செயல். மக்கள் மத்தியில் எடுபடாது. இந்த நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும், காங்கிரசும்தான். ஆனால் இப்போது தி.மு.க.வே நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. சட்டசபை தேர்தலின் போது நீட் தேர்வினை ரத்து செய்வோம். அதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பேசினார்கள். இப்போது அதனை ரத்து செய்யாமல் போராட்ட அறிவிப்பு வெளியிடுகிறார்கள். பொதுவாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவதாக இருந்தால் மத்திய அரசு அலுவலகம் முன்புதான் நடத்த வேண்டும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் போராட்ட அறிவிப்பை வௌியிட்டு இருக்கிறார்கள். இவர்களின் போராட்டத்தால் அ.தி.மு.க.வின் எழுச்சியை தடுத்துவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.