மதுரை அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டம்!

‘அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா’ என்ற பெயரில் மதுரையில் நடந்த அதிமுக மாநில மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு “புரட்சித் தமிழர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

எடப்பாடி கே.பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்போது, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 50 ஆண்டு நிறைவு பெறுவதை தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் மதுரையில் இன்று அதிமுக மாநில மாநாடு நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் பட்டியலிடப்பட்டது. 2000 சிறிய மருத்துவமனைகள் திறந்தது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது, பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கியது, 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தது, வேளாண் மண்டலம் அமைத்தது, குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வந்தது குறித்து விளக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சர்வ சமய பெரியோர்கள், எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சேவையைப் பாராட்டி, “புரட்சித் தமிழர்” என்ற பட்டத்தை வழங்கினர். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை கட்டிக் காப்பாற்றுவார் என்று கூறி, “புரட்சித் தமிழர்” பட்டம் மேடையில் வழங்கப்பட்டது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.