மாநில எல்லைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து கனிமவளம் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் முதல் நாகர்கோவில் வரை மலைப்பகுதிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்திற்கு கடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டம் கூடங்குளம், இருக்கன் துறை, வள்ளியூர் உள்ளிட்ட இடங்களிலும் கல் உள்ளிட்ட கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கடத்தப்படுகின்றன. அதேபோல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிகள், செயற்கை மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கடத்தப்படுகின்றன.
பூமிக்கு அடியில் சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்கின்றன. தென் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சட்டவிரோத கல் குவாரிகள் அனைத்தையும் அரசு மூட வேண்டும். மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து கனிமவளம் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, கனிமவளக் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்கள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.