வட மாநில பாஜக தலைவர்களை ரஜினி சந்திப்பது ஏன்: வன்னியரசு

திரைப்படத்தின் மூலம் வரும் ஆபத்தை விட திரு.ரஜினியின் பாஜக ஆதரவு அரசியல் மிக ஆபத்தானதாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்னியரசு கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இந்த படம் ஒரு வாரத்தில் ரூ 375 கோடி கலெக்ஷன் ஆகியுள்ளதாக சன் பிக்சர்ஸ் வெளிப்படையாக அறிவித்திருந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரஜினி இமயமலைக்கு புறப்பட்டார். அங்கு பாபா குகையில் அவர் 2 மணி நேரம் தியானம் செய்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் அவர் கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ரஜினி, நேற்றைய தினம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது யோகியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் தன்னைவிட 21 வயது குறைவான யோகியின் காலில் விழுவதா என கேள்வி எழுந்தது. ஆனால் ரஜினி ரசிகர்களோ ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி. யோகியை அவர் அரசியல்வாதியாக பார்க்கவில்லை. கோரக்நாத் பீடத்தின் மடாதிபதியாகவே யோகியை பார்த்ததால்தான் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் என்கிறார்கள்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என பெருமைப்பட பேசிய ரஜினி காந்த் அவர்கள், வலதுசாரி அரசியலை நோக்கியே நகர்கிறார் என எல்லோருக்குமே புரிந்தது. பாஜக நிர்வாகிகள் பலர் கட்சி ஆரம்பிக்க ரஜினி பக்கம் இடம் பெயர்ந்தனர். தமிழருவி மணியன் போன்ற அரசியல் புரோக்கர்களும் திரு.ரஜினிக்கு முட்டுக்கொடுத்து பார்த்தனர். ஆனாலும் உடல் நிலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்தார். ஆனாலும் தமது வலதுசாரி அரசியல் போக்கை வெளிப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறார்.

தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு இமயமலை போனவர், பாஜக ஆளும் மாநில ஆளுநர்களை சந்தித்து வருகிறார். அதுமட்டுமல்ல; உபி முதல்வர் யோகியோடு ஜெயிலர் திரைப்படத்தை காணப்போவதாகவும் அறிவித்துள்ளார். இது ஏதோ சினிமாவுக்கான ப்ரமோசன் என நினைக்க வேண்டாம்.
வட மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்களை சந்திப்பதன் மூலம் பாஜக எதிர்ப்பை ரஜினி ரசிகர்களிடையேயும் தமிழ்நாட்டு மக்களிடையேயும் குறைக்கலாம் என்பது தான் இந்த சந்திப்புக்கு பின்னால் உள்ள சதி அரசியல். திரைப்படத்தின் மூலம் வரும் ஆபத்தை விட திரு.ரஜினியின் பாஜக ஆதரவு அரசியல் மிக ஆபத்தானதாகும். தனது புகழை பாஜகவுக்கு திசை திருப்பும் ரஜினியின் சதியை புரிந்து கொண்டு முறியடிப்போம். இவ்வாறு வன்னி அரசு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.