தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இரண்டொரு மாதங்களில் முடிக்கப்படும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
ஈரோட்டில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இரண்டொரு மாதங்களில் முடிக்கப்படும். அவ்வாறு செய்யும்போது, மதுபானங்கள் எங்கே வாங்கப்பட்டது முதல் வழியில் ஏதாவது தவறுகள் நடந்தால்கூட தெரிந்துவிடும். டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கப்படும். மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வந்து விற்பனை செய்யப்படுவது வரை, அவற்றை கண்காணித்துக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. எந்த கடையும் புதிதாக திறக்கப்படவில்லை. மூடப்பட்டுள்ள கடைகள் தவிர, எங்காவது பள்ளி, கோயில் அருகில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினால், அந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, புதிதாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. 500 கடைகள் அடைக்கப்பட்டது அடைக்கப்பட்டதுதான். அதேநேரம், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்ற கடைகளை வேறு இடத்துக்கு மாற்றி வைப்பதற்கான சூழல் இருந்தால், அதை செய்வதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
டாஸ்மாக் பணியாளர்கள் அரசிடம் 49 கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அதில் ஏறத்தாழ பேச்சுவார்த்தை நடத்தி 39 கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். ஊதியப் பேச்சுவார்த்தை என்பது மற்ற துறைகளையும் ஒப்பிட்டு செய்ய வேண்டிய ஒரு பணி. அதை தனித்து நேரடியாக செய்ய முடியாது, மற்ற துறையுடன் ஒப்பிடச் செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.