மாநிலங்களவை உறுப்பினராக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மீண்டும் பதவியேற்றார்.
ஐஎஃப்எஸ் அதிகாரியான எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலாளராகப் பணியாற்றியவர். 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதை அடுத்து, எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அதே ஆண்டின் ஜூலை மாதம் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
ஜெய்சங்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, கோவா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியான 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடந்த மாதம் 24-ம் தேதி தேர்தல் நடந்தது. மீண்டும் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்கவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஜெய்சங்கர், தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக இன்று முறைப்படி அவர் பதவி ஏற்றுக்கொண்டார். மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், ஜெய்சங்கருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதை அடுத்து, அவைத் தலைவருக்கு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார். அப்போது, அவைத் தலைவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர், “மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன். தேச மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வாய்ப்பளித்த குஜராத் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.