காவிரியில் நீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஆகஸ்டு 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
காவிரி ஆறு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஓடுகிறது. இந்த நதி நீர் தான் கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இதனால் பருவ மழை பற்றாக்குறையாக உள்ள காலங்களில் தமிழ்நாடு கர்நாடகா இடையே நீரை பங்கிடுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. கடந்த சில வருடங்களாக மழை சரியாக பெய்த காரணத்தால் பிரச்சனை எழவில்லை. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கர்நாடாகா, கேரளா, தமிழ்நாட்டில் போதிய அளவு பெய்யவில்லை. இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷணராஜசாகர், ஹேமாவதி ஆகிய அணைகளில் தண்ணீர் போதிய அளவு நிரம்பவில்லை. இதனால் கர்நாடகா தண்ணீரை திறக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் பிரச்சனை இருந்த காரணத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு பிறப்பித்த உத்தரவின்படி, காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீர் திறக்கப்பட வேண்டும் என்றும். இந்த 177.25 டி.எம்.சி. தண்ணீரும் படிப்படியாக திறந்து விடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் மாதம் 10 டி.எம்.சி., ஜூலை-34, ஆகஸ்டு-50, செப்டம்பர்-40, அக்டோபர்-22, நவம்பர்-15, டிசம்பர்-8, ஜனவரி-3 என ஒவ்வொரு மாதத்திற்கும் கணக்கிட்டு மொத்தம் 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம், தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிட வேண்டும்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் போதிய அளவு பருவ மழை கர்நாடகாவில் பெய்யவில்லை. ஆனால் ஜூலையில் நன்றாக பெய்தது. அதேநேரம் ஆகஸ்ட் மாதம் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் கர்நாடாகவில் உள்ள அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதனால் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுத்துவருகிறது. தங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்று தெரிவித்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி உள்ளது. அந்த மனு அவசர மனுவாக இன்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் கர்நாடக அரசு தனது நிலைப்பாடு குறித்து இன்று பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது. அத்துடன் அண்மையில் காவிரியில் நீர் திறக்குமாறு காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரவும் கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
அதேநேரம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. வினாடிக்கு சுமார் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு தற்போது வந்து கொண்டிருக்கிறது.. கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 717 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளான பாஜக ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தொிவித்துள்ளன. இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசின் மனுவும், தமிழக அரசின் மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தனி அமர்வை அமைக்க உத்தரவிட்டு ஆகஸ்டு 25 ஆம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.