உதயநிதியால் குரூப் 4 தேர்வை எழுத முடியுமா?: அண்ணாமலை!

ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் குரூப் 4 தேர்வெழுத முடியுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு விலக்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசையும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் கண்டித்து திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசுகையில், இதுவரை 21 உயிர்களை நீட் தேர்விற்கு பலி கொடுத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் நாம் தற்கொலை என பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் சொல்கிறேன். இந்த 21 மரணங்களும் தற்கொலை அல்ல. கொலை. இந்த கொலை செய்தது ஒன்றிய பாஜக அரசு. அதற்கு துணைநின்றது அதிமுக. நான் நீட் குறித்து 5 ஆண்டுகளாக பேசிவிட்டேன். இனிமேலும் பேச தயாராக இருக்கிறேன். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நான் அமைச்சராகவோ எம்எல்ஏவாகவோ பங்கேற்கவில்லை. நான் ஒரு சாதாரண மனிதராக உதயநிதி ஸ்டாலினாக நீட்டால் இறந்தவர்களுக்கு அண்ணனாக பேச வந்திருக்கிறேன். என் பதவியே போனாலும் பரவாயில்லை என்றுதான் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

இங்கே ஒரு பக்கம் நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் போல் கூட்டம் நடத்தி வருகிறார். அதில் ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஐ வில் நெவர் என்கிறார். நான் கேட்கிறேன், Who are you? எங்கள் முதல்வர் சொல்கிற வேலையை ஒன்றிய அரசிடம் கொடுப்பதுதான் உங்கள் வேலை. நீங்கள் ஒரு தபால்காரர். நீங்கள் ஆர் என் ரவி அல்ல, ஆர் எஸ் எஸ் ரவி. ஆளுநருக்கு நான் சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்யுங்கள். அங்கே எங்கள் கழகத்தின் கடைக்கோடி தொண்டரை நிற்க வைக்கிறோம். உங்களால் வெற்றி பெற முடியும் என்றால் அப்போது மக்களை சந்தியுங்கள். உங்கள் சித்தாந்தங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் போய்ச் சொல்லுங்கள். நீங்கள் வென்றதும் வாருங்கள், அதன் பிறகு நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். தமிழ்நாட்டு மக்களை பற்றி உங்களுக்கு தெரியாது என்றார்.

இதுகுறித்து நெல்லையில் நடந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. அமைச்சர் உதயநிதிக்கு எதை பேச வேண்டும் எதை பேசக் கூடாது என தெரியவில்லை. ஆளுநர் தேர்தலில் நிற்க முடியுமா என கேட்டார். நான் கேட்கிறேன் , ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் குரூப் 4 தேர்வெழுத முடியுமா? உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ. பதவியை துறந்துவிட்டு யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். உதயநிதி ஸ்டாலின் சாதாரண டி.என்.பி.எஸ்.சி. அல்லது சிவில் சர்வீஸ் தேர்வு, இல்லை எனில் குரூப் 4 தேர்விலாவது தேர்ச்சி பெற்றுவிட்டு பேசட்டும்.

திமுகவில் உள்ள சீனியர்கள் உதயநிதிக்கு அரசியலமைப்பு சட்டத்தை சொல்லித் தர வேண்டும். நான் பாஜக மாநில தலைவராக இருந்தாலும் என்னை விட சீனியரான பொன்னார் அண்ணன் இன்று வரை நான் இப்படி பேச வேண்டும். இப்படி பேசக் கூடாது என அறிவுறுத்துவார். இதை நான் வரவேற்கிறேன். எனவே உதயநிதியும் எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல் உதயநிதி பேசக் கூடாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.