மதுரை மாநாட்டில் அதிமுக கொடியேற்றிய பழனிசாமி விரைவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் நடந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டத்தை வழங்கியதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் மாநில ஜெ. பேரவையின் சார்பில் காந்தி அருங்காட்சியகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அப்போது, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது:-
புரட்சித் தமிழர் பட்டத்தை கே.பழனிசாமிக்கு கொடுத்ததை கண்ணிருந்தும் குருடர் போல் சிலர் என்ன புரட்சி செய்தார் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் அவர் ஆற்றிய மக்கள் நலத்திட்டங்களை நினைத்துப் பார்த்தால் தெரியும், அது அவருக்குரிய பட்டம் என்று. மதுரையில் நடந்த மாநாட்டுக்கு 30 கிலோ மீட்டர் தொலைவிற்கு தொண்டர்கள் காத்திருந்து வந்தனர். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டுக்கு உரிய காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். ஆனால், காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. தடைகளைத் தாண்டி மாநாட்டுக்கு 15 லட்சம் தொண்டர்கள் வந்துள்ளனர்.
இந்த மாநாட்டின் சிறப்பை உலகமே ஏற்றுக் கொண்டு கொண்டாடும் வகையில் சிலர் கரும்புள்ளி வைத்து மகிழ்ச்சி அடைகின்றனர். 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் பாத்திரம் எடுத்துச் செல்லும் பொழுது கொஞ்சம் மிச்சம் இருந்தது. சில சிதறி கிடந்ததை எடுத்துக்காட்டி மிகைப்படுத்திவதை வேதனையாக உள்ளது. கல்யாண வீடு, காதுகுத்து, சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு உணவு வழங்குவதே சவாலான காரியம். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோருக்கு உணவு வழங்கியுள்ளோம். மாநாட்டின் வெற்றியை உலகமே பாராட்டிய போது சிறிது உணவு சிந்திக் கிடந்ததை பெரியதாக மிகைப்படுத்தி காட்டியுள்ளார்கள். இந்த சூழ்ச்சிகள் எடுபடாது, மாநாட்டை வெற்றியை யாரும் குறை சொல்வதற்கு எந்த விஷயம் கிடைக்கவில்லை. அதனால், புளியோதரை தோல்வியை பேசுகிறார்கள்.
கே.பழனிசாமி 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரும் போது சில எதிர்ப்புகள் இருந்தது. அதை எல்லாம் தகர்த்தெறிந்து, எனக்கு முதலமைச்சர் பதவி முக்கியமல்ல மாணவர் நலன்தான் முக்கியம் என்று கூறி, அதைக் கொண்டு வந்து வெற்றி அடைந்தார். இந்த ‘நீட்’ தேர்வை திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. அதற்குரிய ஆதாரத்தை மாநாட்டின் மேடையிலே கே.பழனிசாமி காண்பித்தார்.
‘நீட்’ எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் அதனால்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் எதிரான முதல் கையெழுத்து போடுவோம் என்று திமுகவினர் கூறினார்கள். கையெழுத்து போடுவதற்கு பேனா கிடைக்கவில்லையா அல்லது கடலில் வைக்கப்படும் பேனாவில் கையெழுத்து போடுவார்களா? ‘ஜெயிலர்’ படத்தை விட அதிமுக மாநாடு பேசப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.