நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை என்று தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெயக்குமார்!

எங்களால் நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை என்று தமிழக மக்களிடம் பகிரங்கமாகக் கூறி ஸ்டாலினும், உதயநிதியும், மக்கு சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

விடியா திமுக ஆட்சியில், தமிழக சுகாதாரத் துறையை சீரழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்ததுபோல் செயல்பட்டு வரும் மந்திரி மா. சுப்பிரமணியன் என்ற மக்கு சுப்பிரமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில், 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது பற்றி கேள்விப்பட்டது முதல் பித்தம் தலைக்கேறி உளறத் தொடங்கியுள்ளார். சென்னையில், பரம்பரை வாரிசு உதயநிதி நடத்திய உண்ணாவிரதம் பிசு பிசுத்ததை மறைக்க, மாநாட்டு வெற்றி நாயகர் “புரட்சித் தமிழர்” அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மீது புழுதியையும், சேற்றையும் வாரி இறைக்கும் வேளையில் இறங்கி இருக்கிறார்.

“நீட் தேர்வு விவகாரத்தால் உயிர் துறந்த 21 பேர் மரணத்திற்கு, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள்தான் காரணம் என்று, தன் நாவை திறந்து நெருப்பைக் கக்கி இருக்கிறார் இந்த மந்திரி சுப்பிரமணியன். நீட்டை ஒழிப்பதற்கு இதய சுத்தியோடு பாடுபட்டவர் மக்களின் முதல்வர் “புரட்சித் தமிழர்” அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.

ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், அவரது வாரிசு உதயநிதியும், வாய்ப் பந்தல் போட்டு ஏமாற்றியதன் விளைவுதான் இத்தனை அகால மரணங்கள். மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்ட திமுக-வினர், தங்கள் தவறுகளை மறைப்பதற்கு அடுத்தவர்கள் மீது பழிபோடுவது குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

நவபாஷாணத்தில் புழுத்த புழுவாக நெளித்து, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் மந்திரி சுப்பிரமணியம் தான், அரசு மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களுக்குக் காரணம் என்றால் ஏற்பாரா? காவல் நிலைய மரணங்களுக்கும், என்கவுண்டர்களுக்கும் அந்தத் துறையை கையில் வைத்திருக்கும் நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின்தான் காரணம் என்றால் ஏற்பார்களா?

தேர்தல் பரப்புரையின் போது, வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல், புருடா மன்னன் உதயநிதி அவிழ்த்துவிட்ட நிறைவேற்ற முடியாத நீட் ரத்து வாக்குறுதிதான் இத்தனை மரணங்களுக்கும் காரணம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். விளையாட்டு மந்திரியின் வினையான பேச்சுக்கள் தான், நம்பிய மக்களை காவு வாங்கி இருக்கிறது.

‘எங்களால் நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை’ என்று தமிழக மக்களிடம் பகிரங்கமாகக் கூறி ஸ்டாலினும், உதயநிதியும், மக்கு சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க வேண்டும். வீணாக வாய் நீளம் காட்டினால் “குட்டி குறைத்து, தாய் தலையில் விடிந்த கதையாகிவிடும்” என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.