தமிழகத்திற்கு இன்னும் 8 டி.எம்.சி. காவிரி நீர் வழங்க வேண்டும் டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடகாவின் ஹாசனில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காவிரி நீர் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்துடன் போராட்டம் நடத்துகின்றன. இதை என்னால் தடுக்க முடியுமா?. தற்போது அணைகளில் எவ்வளவு நீர் உள்ளது என்பது குறித்து கூறியுள்ளேன். இயல்பான அளவில் மழை பெய்து இருந்தால் தமிழகத்திற்கு 70 டி.எம்.சி. நீர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் போதிய மழை பெய்யவில்லை. அதனால் 32 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். அதில் இதுவரை 24 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியுள்ளோம். இன்னும் 8 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். நமக்கு நீர் பற்றாக்குறை உள்ளது. ஆனால் தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. நாளை (இன்று) அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.