ஓபிஎஸ் கோஷ்டி மானம் உள்ளவர்களாக இருந்தால் இனி அதிமுக கரை வேட்டியையும் கட்சி கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனுவை தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகம்மது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இன்று மேற்கூறிய வழக்கில் தீர்ப்பளித்தது. இதில் ஓபிஎஸ் தரப்பினரின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் செல்லும் என தீர்ப்பளித்த நிலையில், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிட முடியாது. எனவே, ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதேபோல், கட்சியிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரை நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கையையும் நிராகரிப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் அடியாக இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ந்தனர். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஒ பன்னீர் செல்வம் கோஷ்டி அடிமேல் அடி.. குட்டு மேல் குட்டு வாங்கி.. தொண்டர்களால் குட்டு வாங்கப்பட்டு, பொதுமக்களாலும் குட்டு வாங்கப்பட்டு.. உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தாலும் குட்டு வாங்கியுள்ளது. ஓபிஎஸ் கோஷ்டி மானமுள்ளவர்களாக இருந்தால் அதிமுக கரை வேட்டியை கட்டக் கூடாது. அதுதான் உண்மையிலேயே மானமுள்ளவர்களுக்கு அழகு.. கொடியை பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களை வைத்து பிளெக்ஸ் போர்டு வைக்கக் கூடாது. அதிமுக கொடியை பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தை வைத்து.. கட்சியின் வண்ணத்தை பயன்படுத்தி கொடி கட்டுவது என்பது சட்டத்தை மீறிய செயலாகவும் மானமில்லாதவர்களின் செயலகாத்தான் அதிமுக தொண்டர்களும் மக்களும் கருதுவார்கள். உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை உறுதிப்படுத்தி உள்ள நிலையில், மேல்முறையீடுக்கு அவர்கள் எங்கு சென்றாலும் நியாயம் தர்மம் நீதி நிலைநாட்டப்படும். மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாடு இந்திய அளவில் ஒரு திருப்பு முனை என்று சொல்லலாம். தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு மாநாட்டு எந்த காலத்திலும் நடந்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.