ஃபுகுஷிமா கதிரியக்க நீா் கடலில் கலக்கப்படுவதற்கு சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
பல்வேறு நாடுகளின் எதிா்ப்பையும் மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்கபான் வியாழக்கிழமை கடலில் வெளியேற்றத் தொடங்கியது. இது, சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜப்பானிலிருந்து கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு சீனா தடை விதித்தது.
இது குறித்து அந்த நாட்டு வா்த்தகத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், கதிரியக்க நீரை கடலில் கலப்பது ஜப்பானின் சுயநல மற்றும் பொறுப்பற்ற முடிவு என்று விமா்சித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக தென் கொரியாவில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜப்பானின் இந்த முடிவுக்கு அந்த நாட்டு அரசு ஆதரவு தெரிவித்தது அங்கு மிகப் பெரிய அரசியல் பிரச்னையாகியிருக்கிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணு மின் நிலையத்துக்குள் கடல் நீா் புகுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அந்த விபத்துக்குப் பிறகு அணு உலைகளிலிருந்து கதிரியக்க நீா் வெளியேறியது. அதனை பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனா்.
தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்த நிலையில், ஜப்பான் சென்று அந்த நீரை ஆய்வு செய்த ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள், அதனை கடலில் கலப்பது பாதுகாப்பானதுதான் என்று கூறினா். இந்நிலையில், கதிரியக்க நீரை நேற்று வியாழக்கிழமை முதல் ஜப்பான் கடலில் கலக்கத் தொடங்கியுள்ளது.