நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்: ஆளுநர் தமிழிசை

நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆளுநரை வேண்டுமென்றே விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தப் பொறுப்புக்கு மரியாதை அளிக்க வேண்டும். இந்தச் சண்டையை முடித்துவைக்க என்ன முயற்சி என்பதை பார்க்க வேண்டும். ஆனால், முதல்வர் விமர்சனம் செய்வதைத்தான் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள இயலாது.

முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேச வேண்டும். முதல்வர் அதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆளுநர் மீது விமர்சனம் செய்யாதீர்கள் என தனது கட்சியினருக்கு முதல்வர் கட்டளையிட வேண்டும். ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை. ஓர் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால், அதற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.

எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் இதை தேவையில்லாமல் அரசியல் ஆக்குகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம். கார்த்தி சிதம்பரம் நீட் தேர்வுக்கு முழு ஆதரவாக உள்ளார். அவரது அம்மாதான் நீதிமன்றத்தில் போராடி நீட் தேர்வை வாங்கிக் கொடுத்தார். உயிரைக் காக்கும் தொழிலை படிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், உயிரைப் போக்குவது எப்படி சரியாக இருக்கும். உயிரைப் போக்குவதை இங்கு கொண்டாடுகின்றனர். இது மிகவும் கவலை அளிக்கிறது.

காலைச் சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் ஊட்டச்சத்துடன் கல்வி என்று அது இருக்கிறது. அந்தக் கல்விக் கொள்ளையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றனர். அதில் இருப்பதை காப்பி அடிப்போம் என்றால் என்ன செய்வது. தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் சாதிப் பிரச்சினை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.