தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது: அமித்ஷா

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் கம்மத்தில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-

தெலங்கானாவில் கேசிஆர் (சந்திரசேகரராவ்) ஆட்சி அழியும். சோனியா குடும்பத்துக்காக காங்கிரசும், கல்வகுண்ட்லா சந்திரசேகரராவ் குடும்பத்துக்காக பிஆர்எஸ் கட்சியும் பாடுபடும். மக்களுக்காக பாடுபடாது. பத்ராசலம் ராமர் கோயில் தெற்கின் அயோத்தி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீராம நவமி அன்று மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் வழங்கும் பாரம்பரியத்தை சந்திரசேகரராவ் புறக்கணிக்கிறார். சந்திரசேகரராவின் கார் பத்ராசலம் செல்லும். ஆனால் கோயிலுக்கு செல்லாது. ஏனென்றால் அவரது ஸ்டீயரிங் எம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி கையில் உள்ளது.

காங்கிரஸ் 4ஜி கட்சி, பிஆர்எஸ் 2ஜி கட்சி, எம்ஐஎம் 3ஜி கட்சி என குடும்ப கட்சிகளாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜவும், பிஆர்எஸ் கட்சியும் ஒரே கூட்டணி என பொய் சொல்கிறார். பிஆர்எஸ் மற்றும் எம்ஐஎம் உடன் பாஜ ஒருபோதும் சேராது. காங்கிரஸ் கட்சியுடன் பிஆர்எஸ் மற்றும் எம்ஐஎம் கட்சிகள்தான் ஒன்றாக உள்ளது. பாஜக தலைவர்களான கிஷன்ரெட்டி, பாண்டிசஞ்சய், எடல ராஜேந்தர் ஆகியோரை கைது செய்து மிரட்டலாம் என கேசிஆர் கருதுகிறார். அதற்கெல்லாம் பாஜக அஞ்சாது. வரும் தேர்தலில் தெலங்கானாவில் பாஜக ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.