பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியாக எழுந்த வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜரானார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துவிட்டார். இந்த நிலையில் அந்த தகவலை அவர் டெலிட் செய்துவிட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக எஸ்.வி.சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரிலும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ் வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக நடிகர் எஸ்.வி.சேகர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 12 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து எஸ்வி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் நான் ஒரு மெசேஜை பார்வார்டு செய்ததாக என் புகாரின் பேரில் விசாரணைக்கு வந்துள்ளேன். நான் அந்த மெசேஜை படிக்கும் போது அதில் முதலில் இருந்த சில வரிகள் பெண்களுக்கு அவதூறு பரப்பும் வகையில் இல்லை. அதனால்தான் பார்வேர்டு செய்தேன். நான் எப்போதும் பெண்களை விமர்சிக்க மாட்டேன். நான் பார்வேர்டு செய்த மெசேஜில் ஏதோ தவறு இருக்கிறது என கூறிய அரை மணி நேரத்தில் அதை டெலிட் செய்துவிட்டேன். ஆனால் யாரோ இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்தார்கள் என்கிறார்கள். ஸ்கிரீன்ஷாட்டோ இல்லை போட்டோஷாப்போ தெரியவில்லை. ஏனெனில் ஒரிஜினல் மெசேஜ் இல்லை. அப்படியிருக்கும் போது நான் தவறாக பெண்களை சொன்னேன் என எப்படி கூற முடியும். நான் பெண்களை தவறாக கூறினேன் என்றால் அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் சிலர் பெண் பத்திரிகையாளர் குறித்த அந்த மெசேஜை நான் பார்வேர்டு செய்த போது கண்களில் சொட்டு மருந்து விட்டிருந்ததாக நீதிபதியிடம் கூறினீர்களா என கேட்டனர். அதற்கு எஸ்.வி.சேகர் அப்படியெல்லாம் இல்லை, ஊடகத்தில் வரும் அனைத்து கருத்துகளும் உண்மை இல்லை. இப்போது கூட நான் பாக்கெட்டில் சொட்டு மருந்து வைத்திருக்கிறேன். இதோ பாருங்கள் (மருந்தை காட்டுகிறார்). யார் யாரோ என்னென்னமோ மருந்துகளை வைத்துள்ளார்கள் என கிண்டல் செய்தார்.