தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஏலம் விட வேண்டிய சொத்துப் பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள நீதிமன்றத்தில் சொத்துப் பட்டியலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று ஒப்படைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசி உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த பொருட்களை உடனடியாக ஏலம் விடக்கோரி கா்நாடக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஏலம் விட வேண்டிய சொத்துப் பட்டியல் நீதிமன்றத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் உடனடியாக ஏலம் விட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்குரைஞா் டி.நரசிம்மமூா்த்தி தொடா்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்தாா். இதைத் தொடா்ந்து, கிரண் எஸ்.ஜவளி என்ற மூத்த வழக்குரைஞரை கா்நாடக அரசு கடந்த மாா்ச் மாதம் நியமித்தது. இதன் தொடா்ச்சியாக பறிமுதல் செய்த பொருட்களை ஏலம் விட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜூன் 3ஆம் தேதி விசாரணை நடந்தபோது, ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற விலை உயா்ந்த ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எங்கு உள்ளன? என்று கேள்வி எழுப்பி வழக்குரைஞா் டி.நரசிம்மமூா்த்தி மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், 1996ஆம் ஆண்டு டிச.12ஆம் தேதி தேவைப்படும்போது அனைத்து பொருட்களையும் நீதிமன்றத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயலலிதாவின் பணிச் செயலாளரான வி.பாஸ்கரன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜூலை 10ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வி.பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி கா்நாடக சட்டத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் டி.நரசிம்மமூா்த்தி மனு தாக்கல் செய்தா. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தொடா்புடைய அனைத்து சொத்துக்களையும் உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து, அவற்றை காலதாமதம் இன்றி ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவா் கோரியிருந்தார். இந்த நிலையில், ஏலம்விட வேண்டிய சொத்துப் பட்டியல் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.