மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமையலர்கள் உட்பட 5 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்திய மாநிலங்களில் ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 60க்கும் மேற்பட்டோர் திட்டமிட்டனர். இதற்காக இக்குழுவினர் இந்திய ரயில்வேயிலுள்ள ஐஆர்சிடிசி மூலம் ரயில் பெட்டி ஒன்றை முன்பதிவு செய்து, கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கினர். மீனாட்சி அம்மன் கோயில், ராமேசுவரத்தில் தரிசனம் செய்வதற்காக மதுரைக்கு 26-ம் தேதி அதிகாலை வந்தனர். அவர்கள் பயணித்த ரயில் பெட்டி, மதுரை ரயில் நிலையம் அருகிலுள்ள போடி லைன் பகுதியில் நிறுத்தி இருந்தபோது, தீவிபத்தில் சிக்கியது. இதில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். உயிர் தப்பியவர்கள், இறந்தவர்களின் உடல்கள் விமான மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் குழு, ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த ரயில் பெட்டியில் சட்ட விரோதமாக கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட்டதால் தீ பொறி ஏற்பட்டு தீ விபத்து நடந்தது தெரியவந்தது. இந்நிலையில், விபத்து ஏற்பட்டபோது, அப் பெட்டியில் பயணித்தவர்களில் தப்பியோடி 5 பேரை ரயில்வே போலீஸார் பிடித்தனர். அந்தப் பெட்டியில் பயணித்தவர்களுக்கு சமையல் பணிக்காக வந்ததும் தெரிந்தது. ரயில்வே காவல் துறை கூடுதல் டிஜிபி வனிதா மேற்பார்வையில் எஸ்பிக்கள் செந்தில்குமார், பொன்ராம் தலைமையில் டிஎஸ்பி பொன்னுச்சாமி, ஆய்வாளர் ஜெயப்பிரித்தா உள்ளிட்ட போலீஸ் குழு 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், சமையலுக்கென வந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் சித்தாப்பூரைச் சேர்ந்த ஜெகதீஸ் மகன் தீபக்(23), சீட்டாபூர் மாவட்டம், மச்சிள மண்டி தாம் சேன்கன்ஞ் கணேஷ் பிரசாத் ரஸ்தோகி மகன் சத்பிரகாஷ் ரஸ்தோகி (47) ,சீட்டாபூர் கோலி நகர் நயா பஸ்தி கேளட்டு கஸ்யம் மகன் சுபம் கஸ்யம் (19), பிரேம்நகர் நரேந்திர் குமார் (61) , ட்ரீம் நகர் மணீஸ் சகானி மகன் கார்த்திக் சகானி (25) என, தெரியவந்தது. சமையல் பணிக்காக அழைத்து வரப்பட்ட 7 பேரில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் மட்டும் பிற பயணிகளுடன் உயிர் தப்பிய நிலையில் சிக்கினர். தீவிபத்துக்கு இவர்களே காரணம் என தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டனர். 5 பேரும் மதுரை 4 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:-
லக்னோ பகுதியில் இருந்து தென்னிய பகுதிக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த டிராவல்ஸ் நிறுவனம் மொத்தம் 63 பேருக்கு ஒரு ரயில் பெட்டியை முன் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சமையலர், டீ போடுபவர், உதவியாளர் என, 7 பேர் வந்துள்ளனர். இவர்களில் நரேந்திர்குமார் என்பவரை சுற்றுலா ஏற்பாடு செய்த டிராவல்ஸ் நிறுவனமே நியமித்து அனுப்பியுள்ளது. இவர்கள் மூலம் சட்ட விரோதமாக 2 சிலிண்டர்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கன்னியாகுமரி பகுதிக்கு சுற்றுலா சென்றபோது, அங்கு வைத்து கூடுதலாக ஒரு சிலிண்டர் வாங்கியுள்ளனர்.
தீ விபத்துக்கு பிறகு அப்பெட்டியில் பயணித்தவர்களின் பெயர், விவரம் சேகரித்தபோது, 5 பேர் மட்டும் மாயமாகி இருந்தனர். அவர்களை தேடியபோது, சொந்த ஊருக்கு தப்பிக்க, முயன்ற அவர்களை ரயில் நிலைய பகுதியில் வைத்து பிடித்தோம். இவர்களில் சத்பிரகாஷ் ரஸ்தோகி என்பவர் சம்பவத்தன்று டீ போட்டுள்ளார். அப்போது, சிலிண்டர் குழாயில் கியாஸ் கசிவு ஏற்பட்டு அதன் மூலம் தீ பொறி வெளியேறியதில் ரயில் பெட்டி தீபிடித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். 7 பேரில் 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மெயின் சமையலர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கன்னியாகுமரி பகுதியில் சட்டவிரோதமாக சிலிண்டர் கொடுத்த நபர் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரும் விரைவில் கைது செய்யப்படுவார்” என்றனர்.
கைதானவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஐந்து பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதான ஐந்து பேரையும் செப்டம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.