பைடனுடைய செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும்: ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடைய செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

நேர்மையற்றவரான ஜோ பைடன் முட்டாள் மட்டுமல்ல, திறமை இல்லாதவரும் கூட. நாட்டின் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எல்லைகளை திறந்துவிட்டதன் மூலம், அப்பட்டமான வெறிப்பிடித்தவரான அவருக்கு மூளை கலங்கிவிட்டது என்று நினைக்கிறேன். அவரது மனப்பிறழ்வு நமது நாட்டை சீரழித்து மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும். இவ்வாறு ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அரிஸோனா மாகாணத்தில் அமெரிக்கா – மெக்சிகோ எல்லைக் கதவுகள், வெள்ளம் ஏற்படுவதை தடுக்கும்பொருட்டு, மழை நீரை வெளியேற்றுவதற்காக அதிகாரிகளால் திறக்கப்பட்டன. ஆனால் இந்த நடவடிக்கை அமெரிக்காவில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. வெள்ளத்துக்காக திறக்கப்பட்ட எல்லைக் கதவுகளின் வழியே பலரும் சட்டவிரோதமான வகையில் அமெரிக்காவில் நுழைவதாக குற்றம்சாட்டப்பட்டது.