சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் பிட் அடித்த எஸ்ஐ மனைவி: 2 எஸ்ஐ, டாக்டர் கைது!

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்ஐ மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த 2 எஸ்ஐ மற்றும் டாக்டரும் சிக்கி உள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வினை கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி அறிவித்து இருந்தது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் அன்று ஏராளமானோர் எழுதினார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆர்வமுடன் பலரும் எழுதினார்கள். அதில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 23 வயதாகும் லாவண்யா என்பவர், தேர்வு தொடங்கி நடந்து கொண்டிருந்தபோதே, கழிவறை செல்வதாக கூறி வெளியில் சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வர தாமதம் ஆகியிருக்கிறது. அவரிடம் ஏன் என அறை கண்காணிப்பாளர் விசாரித்துள்ளார். அப்போது, லாவண்யா கையோடு வினாத்தாளையும் கழிவறைக்கு கொண்டு சென்றதை அறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். மேலும், அவர் தேர்வு எழுதிய இருக்கையின் கீழ் சில துண்டு தாள்கள் இருந்தையும் தேர்வு அறையின் கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். இதையடுத்து பிட் அடித்ததாகக்கூறி லாவண்யாவை தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியேற்றினார்.

இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அறிந்த ஐஜி சத்யபிரியா உடனடியாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை எஸ்ஐயாக உள்ள சிவக்குமார் மற்றும் செங்கத்தைச் சேர்ந்த டாக்டர் பிரவீன்குமார் ஆகியோரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் லாவண்யா வினாத்தாள் அனுப்பினாராம். அவர்கள் அதற்கான விடைகளை கூகுளில் தேடி சரியான பதில்களை வாட்ஸ் அப்பில் மீண்டும் லாவண்யாவுக்கு அனுப்பினார்களாம். இதை விசாரணையில் கண்டுபிடித்த எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார், எஸ்ஐ சிவகுமார் மற்றும் செங்கத்தை சேர்ந்த டாக்டர் பிரவீன் குமார் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். தேர்வில் பிட் அடித்து விதிமீறலில் ஈடுபட்டதாக வெளியேற்றப்பட்ட லாவண்யாவின் கணவர் சுமன், சென்னையில் எஸ்ஐ ஆக பணியாற்றி வருகிறார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த முறைகேடுக்கு சுமனின் சகோதரியான திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா உதவினாரா என்றும் விசாரித்து வருகிறார்கள். எஸ்ஐ தேர்வில் பிட் அடித்த லாவண்யாவை, அவர் கொண்டு போன இரண்டு பிட்டுகள் கட்டிக்கொடுத்துள்ளது. அதனால் தான் அவர் சிக்கியுள்ளார்.