அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றத்தை நாட முடிவு!

அமலாக்கத் துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அமைச்சர் செந்தில் சிறைக்காவல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், அன்றைய தினமே செந்தில் பாலாஜியை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார். அதன்படியே, செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோவுக்கும், அமலாக்கத்துறை வழக்கறிஞருக்கும் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார். அப்போது அவரிடம் 150 பக்க குற்றப்பத்திரிக்கை நகலும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார். அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், ஜாமீன் கோருவதற்கான வேலையை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் டீம் நேற்று முன்தினமே வேலையை துரிதமாக ஆரம்பித்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு, அந்த மனு விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. அதன்படியே, நேற்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். இதை கேட்ட நீதிபதி அல்லி, Let Me see (மனுவை பார்க்கிறேன்) என்று கூறினார். எனினும், இன்று செந்தில் பாலாஜி ஜாமீன் மனு பட்டியலிடப்படவில்லை.

இதனால், மீண்டும் நீதிபதி அல்லியிடம் ஜாமீன் மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முறையிடப்பட்டபோது, நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அங்கேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம், சிறப்பு நீதிமன்றம்தான் இதுகுறித்து விசாரிக்க முடியும்.. எனவே அங்கே முறையிடுங்கள் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து, செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள், சிறப்பு நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் கோர முற்பட்டுள்ளனர்.உடனடியாக எம்பி எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணிகுமார் ஆகியோர் நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பது சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாட உள்ளது.