மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டம்: டிகேஎஸ் இளங்கோவன்!

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்து உள்ளார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்க இருக்கும் சிறப்புக் கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கட்டாயமாக இது முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவுக்கு பொருத்தமற்றது. 1996 ஆம் ஆண்டு ஒரு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 1998 ஆம் ஆண்டு இன்னொரு தேர்தல் நடைபெற்றது. 1999 ஆம் ஆண்டு மூன்றாவது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போதெல்லாம் மாநிலங்களில் ஆட்சியை கலைத்துவிட்டு, அதோடு தேர்தலை நடத்துவதாக சொல்வதே தவறு. அப்படி நடத்த முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் நாடாளுமன்றத்துக்கும் அனைத்து சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்ற கனவிலே அவர்கள் அதை சொல்கிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் 5 ஆண்டு காலம் ஆட்சி இருக்க வேண்டும். மக்கள் வாக்களிப்பது 5 ஆண்டு ஒருவர் ஆட்சியில் இருப்பதற்காகதான். அதை மீறி நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதோ, அல்லது ஒரு மாநிலத்துக்கு தேர்தல் வரும்போதோ மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆட்சியை கலைத்துவிட்டு எப்படி தேர்தல் நடத்த முடியும்? இந்த சிந்தனையே தவறானது. இதற்கு அரசியலமைப்பு சட்டமும் இடம் கொடுக்காது. மக்களும் இடம்கொடுக்க மாட்டார்கள். அதை புரிந்துகொள்ளாமல் இவர்கள் பேசுகிறார்கள் என்றாலும் அந்த சட்டத்திற்கு முன்னால், அந்த சட்டத்தை எப்படி நிறைவேற்றுவது, நடைமுறைப்படுத்துவது என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இந்த மாற்றங்கள் எல்லாம் வெற்றிபெறுமா? மாநிலங்களவையில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த எண்ணிக்கையை எல்லாம் பார்த்துவிட்டுதான் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.