நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை வெற்றிகரமாக ஆய்வு செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நிலவில் திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 23ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பிறகு 4 மணிநேரத்தில் பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. தற்போது தென்துருவத்தில் விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றன. ரோவர் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று அங்குள்ள கனிமவளங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆக்சிஜன், சல்பர் உள்பட 8 வகையான தனிமங்களை ரோவர் கண்டறிந்துள்ளது. மேலும் அதுகுறித்த முக்கிய தகவல்களை விக்ரம் லேண்டர் வாயிலாக இஸ்ரோவுக்கு அனுப்பியது. அதேபால் விக்ரம் லேண்டரில் உள்ள ஆய்வு கருவிகளும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. விக்ரம் லேண்டர் மேற்கொண்ட ஆய்வில் பிளாஸ்மா அளவு என்பது கணிக்கப்பட்டதை விட குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இது விண்வெளி ஆய்வு கலன்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் ஆய்வு செய்யும்போதே திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விபரத்தை விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சந்திரயான் – 3 விக்ரம் லேண்டரில் நிலவின் நிலஅதிர்வுகளை ஆய்வு செய்யும் வகையில் ஐஎல்எஸ்ஏ எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஐஎல்எஸ் ஏ கருவி தான் ரோவர் மற்றும் பிற ஆய்வு கருவிகளின் செயல்பாட்டால் ஏற்படுகள் அதிர்வுகளை பதிவு செய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த 26ம் தேதி ரோவர் உள்ளிட்ட பிற ஆய்வு கருவிகளால் ஏற்படும் அதிர்வுக்கு அப்பாற்பட்டு புதிதாக இயற்கையாகவே ஒரு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வை விக்ரம் லேண்டரில் உள்ள ஐஎல்எஸ்ஏ எனும் கருவி பதிவு செய்துள்ளது. இந்த அதிர்வுக்கான காரணம் என்ன? என்பது ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட இந்த நிலஅதிர்வின் பிற விபரங்களை இஸ்ரோ இன்னும் தெரிவிக்கவில்லை. மேலும் தற்போதைய சூழலில் இந்த நிலஅதிர்வால் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இரு கருவிகளும் தொடர்ந்து தென்துருவத்தில் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.