தனிநபர்களின் விவரங்களைத் திருடி மோசடியில் ஈடுபடும் நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற பதிவாளர், வெளியிட்டிருக்கும் மக்களுக்கான எச்சரிக்கை செய்தியில், உங்களுக்கு வரும் அதிகாரப்பூர்வமற்ற இணையதள லிங்குகளை மக்கள் யாரும் கிளிக் செய்யவோ, அதனை மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்யவோ வேண்டாம். உச்ச நீதிமன்றம், எந்த தனிநபரின் தனிப்பட்ட தகவல்களையோ, நிதி சார்ந்த தகவல்களையோ அல்லது ரகசியமாக வைக்கப்பட வேண்டிய தகவல்களையோ கோராது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தனிநபர்களிடம் முறைகேடு செய்யும் நோக்கத்தோடு போலி இணையதளம் உருவாக்கப்பட்டிருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் தரப்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்தப் போலி இணையதளம் http://cbins/scigv.com மற்றும் https://cbins.scigv.com/offence என்ற இந்த இணைய முகவரியில் இயங்குகிறது.
https://cbins.scigv.com/offence என்ற இந்த போலி இணையதளம் வாயிலாக, இந்த லிங்கிலிருந்து பண மோசடி செய்யும் வகையில், தனி நபர்களின் தனிப்பட்ட மற்றும் ரகசிய விவரங்களைக் கேட்டுப் பெறலாம். எனவே, எவர் ஒருவரும் இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவோ மற்றவர்களுக்கு பகிரவோ, அதில் கேட்கப்படும் தகவல்களை அளிக்கவோ வேண்டாம் என்றும், இதன் மூலம் மோசடி நடைபெறலாம் என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, வேறு எந்த அதிகாரப்பூர்வ இணையதளம் என்று உறுதி செய்யாத லிங்குகளை கிளிக் செய்யவோ, மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தனிநபர்களின் தகவல்கள் எதுவும் உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் தரப்பில் கோரப்படாது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
ஒருவேளை, ஏற்கனவே, இந்த இணையதளத்தில் தகவல்களை அளித்துவிட்டீர்கள் என்றால், உங்களது வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்து பயனாளர் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை மாற்றிவிடவும். இது குறித்து உடனடியாக விசாரணை அமைப்புகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, உடனடியாக போலி இணையதளங்களை முடக்கி அதனைத் தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் நலனுக்காக வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.