சீமான் மீது அளித்த புகாரின் பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாளர் சுமார் 6 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினார்.
நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை விஜயலட்சுமி பேசினார். சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி புகார் கொடுத்தார். கடந்த முறையே இது போல அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அப்போது சீமான் தரப்பில் விஜயலட்சுமியிடம் சமரசம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சேர்ந்து வாழ்வதாக இவர்கள் சமரசம் பேசிக்கொண்டதாக் கூறப்படுகிறது. இந்த தகவலை விஜயலட்சுமி கொடுத்த புகாரிலேயே குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இந்த முறை அந்த சமரசத்திற்கு வழி இல்லை என்கிறார்கள். ஏனென்றால் விளக்கமான புகார் விஜயலட்சுமி மூலம் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுவிட்டதால் சமரசம் செய்ய சான்ஸ் இல்லை என்கிறார்கள்.
சமீபத்தில் விஜயலட்சுமி தனது பேட்டியில் இந்த சமாதானம் விவகாரம் குறித்து விளக்கமாக பேசினார். அதில், உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோர்க்கும் தெரியும். சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம். ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவை விடக்கூடாது. சீமானை கைது செய்ய வேண்டும். சீமானை கைது செய்யாமல் இருக்க கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம்.
அவர் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் போலீசுக்கு கொடுத்துள்ளோம். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் சில விஷயங்களை போலீசிடம் சொல்லி இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
விஜயலட்சுமி தனது புகாரில், சீமான் அவர்கள் என் தாய் என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன், உங்கள், மகள் விஜயலட்சுமி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று என் தாயாரிடம் கூறினார். என் தாய், எங்கள் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான போராட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. சீமான் அவர்கள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள 3ஸ்டார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு சீமான் அவர்கள் கைபேசியில் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு எனக்கு யாரும் இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. எனக்கு யாரும் இல்லை என்ற சிந்தனை தோன்றுகிறது. மன அழுத்தம்: அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறினார். எனக்கு வழக்கு சம்பந்தமாகவும் எமக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என்று வருத்தப்பட்டார். எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறினார். என் தாயாரிடம்மும் இதையே கூறினார். பின்பு என் தாய் சம்மதத்தோடு சீமான் அவர்கள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் சீமான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றேன். பின்பு அவரின் வழக்கு சம்பந்தமான பணிகளையும் செலவினங்களையும் நானே பார்த்தேன். என்னை சீமானும் அவரின் ஆட்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள், அப்போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள் பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம். பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் அவர்கள் நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம்.
சீமான் அவர்கள் தன்னுடைய அரசியலில் நான் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். இந்த நிலையில் நான் ஏழு முறை கருவுற்றேன். என்னுடைய அனுமதி இல்லாமல் எம்மை சீமான் அவர்கள் நான் கருத்தரிக்கும் ஆறு ஏழு முறையும் எம்மை கட்டயபடுத்தியும் நிற்பந்தபடுத்தி கருச்சிதைவு மாத்திரைகள் எமக்கு கொடுத்து என்னுடைய அனுமதி இல்லாமல் எமக்கு கருச்சிதைவு செய்தார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி உள்ளார்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக அவர்கள் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். சீமான் மீதான புகார் குறித்து 6 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. துணை ஆணையர் உமையாள் விசாரணை அவரிடம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பினார். முக்கியமாக டார்ச்சர் செய்தது, கரு கலைத்தது, மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் உள்ள உண்மை தன்மைகள், இந்த வழக்கு சம்பந்தமாக அவரிடம் உள்ள ஆதாரங்கள், இருவரும் நெருங்கி பழகியதற்கான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஆகியவற்றின் உண்மை தன்மை குறித்து துணை கமிஷனர் உமையாள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக அறையில் வைத்து நடிகை விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதால் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தவர்கள் மற்றும் புகார் சம்பந்தமாக விசாரணைக்கு வந்தவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டும் நடிகை விஜயலட்சுமியிடம் தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் இன்ஸ்பெக்டர் மற்றும் சக போலீசார் யாரும் போலீஸ் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களோடு சேர்ந்து போலீசாரும் காத்திருந்தனர். சுமார் 6 மணிநேரத்துக்கு மேலாக நடந்த விசாரணைக்கு பிறகு நடிகை விஜயலட்சுமி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் ஜீப்பில் அவரது வீட்டுக்கு அழைத்துசெல்லப்பட்டார்.