ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு ஈரோடு கோர்ட்டு சம்மன் அனுப்பியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வருகிற 11-ந்தேதி ஆஜராகும்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்த சீமானிடம், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இந்த சம்மனை வழங்கினர்.